விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் ஒதுங்கின. சக்திக்குளங்கரையில் கண்டெய்னரை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டது. ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலில் மூழ்கிய கப்பல்- கன்டெய்னரில் திடீர் தீ விபத்து : லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பல் திடீரென மூழ்க தொடங்கியது. இதனையடுத்து கப்பலில் இருந்த 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது. அதே நேரம் கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்னர்களை மிதக்க தொடங்கியது. எனவே அந்த கண்டெய்னர்கள் கேரளாவில் உள்ள பல்வேறு கடற்கரை ஓரங்களில் வந்தடைந்துள்ளது. 

கேரள கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் - கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள்

கடல் கரையில் மோதி நிற்கும் நிலையில் கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கொள்கலன் கரை ஒதுங்கியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு அலர்ட் செய்யப்பட்டனர். மூழ்கிய கப்பலில் இருந்து வந்ததாகத் தோன்றும் எந்தப் பொருளையும் கடற்கரையில் கண்டால், அதைத் தொடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் கண்டெய்னர்களில் தண்ணீர் புகுந்தால் கால்சியம் கார்பைடுடன் சேர்ந்து அசிட்டிலீன் வாயு உருவாகி பெரும் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. 

கன்டெய்னரில் திடீர் தீ- ஆட்சியர் விளக்கம்

இந்த நிலையில் கொல்லம் சக்திக்குளங்கரையில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்களை அகற்றும்போது தீ விபத்து ஏற்பட்டது. கண்டெய்னரை வெட்டும்போது, அதனுள் இருந்த ஸ்பாஞ்ச் போன்ற பொருளில் தீ பரவியது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

கண்டெய்னர் தீ விபத்தில் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பலத்த காற்றில், வெல்டிங் செய்யும்போது தீப்பொறி கண்டெய்னருக்குள் இருந்த ஃபோமில் பரவியதே தீ விபத்துக்கான காரணம். கண்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் என். தேவிதாஸ் தெரிவித்தார்.