கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் அழகிய இளம் பெண்களின் செல்போன் எண்களை விலைக்கு விற்ற செல்போன் ரீசார்ஜ் கடைக்காரின் செயலால் உத்தரப் பிரதேசத்தில் குடும்ப பெண்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைத்த காவல்துறை உதவி எண் 1090க்கு, தொடர்பு கொண்ட ஏராளமான பெண்கள், தொடர்ந்து தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக புகார் கூறி வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் அளித்த சுமார் 6 லட்சம் புகார்களில் 90 சதவீதப் புகார்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்ததாக இருந்தது.
பெண்களை செல்பேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள், உங்களிடம் தோழமை கொள்ள விரும்புவதாகக் கூறி பேச்சைத் தொடங்கியுள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால் அவர்களிடம் தவறாகப் பேசுவது, அசிங்கமாகத் திட்டுவது என தொல்லைகள் தொடர்ந்து வந்தன.
இது குறித்து போலீசார் நடத்தி தீவிர விசாரணையில், ரீசார்ஜ் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எண்களை குறித்து வைத்துக் கொண்டு, அவர்களது எண்களை ஆண்களுக்கு விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
மிக அழகான பெண்களின் செல்பேசி எண்களை ரூ.500க்கும், சாதாரண தோற்றம் கொண்ட பெண்களின் எண்களை ரூ.50க்கும் விற்பனை செய்த விவரமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கணவன்களால் சந்தேகத்துக்கு ஆளாகி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த குற்றத்துக்காக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
