கிரைய பத்திர நடைமுறையில் மாற்றம்: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!
கிரைய பத்திர ரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
பத்திரம் என்பது ஒரு சொத்தை வாங்குவதற்கும் விற்பதற்குமான சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு சொத்து வாங்கும்போது அதை வாங்குபவரும், விற்பவரும் இணைந்து கையெழுத்திட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஆவணம் தான் கிரையப் பத்திரம் எனப்படுகிறது. ஒரு சொத்தை கிரைய பத்திரமாக பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
அப்படி கிரையப் பத்திரம் பதிவு செய்யும் போது, முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் அளவிற்கு தமிழக அரசு கட்டணம் வசூலிக்கிறது. அதேபோல், கிரையப் பத்திரத்தை ரத்தும் செய்ய முடியும். அதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்தி இரு தரப்பும் சேர்ந்து ரத்து ஆவணம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கிரையப் பத்திரத்தை ரத்து செய்வதால், அதன் உரிமை மறாது. அதாவது, சொத்தை வாங்கியவரின் பெயரிலேயேதான் அந்த சொத்து இருக்கும். மீண்டும் பழைய உரிமையாளரின் பெயருக்கு மாறாது.
இதனால், பழைய உரிமையாளரின் பெயருக்கு சொத்தை மாற்றுவதற்கு மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மீண்டும் பழையபடி 9 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், வீண் பண விரயம் ஏற்பட்டு வந்தது.
வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: பொது மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
இந்த நிலையில், கிரையப் பத்திர ரத்து நடைமுறையில் தற்போது தமிழக பத்திரப்பதிவு துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, கிரையப் பத்திரத்தை ரத்து செய்யும் போது, 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது' என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் அந்த சொத்து சென்று விடும். இந்த ரத்து ஆவணத்துக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.