வாய்ப்பு உங்களைத் தேடி வருது விட்டுடாதீங்க சந்திரபாபு நாயுடு! துணைப் பிரதமராயிடுங்க! பீட்டர் அல்போன்ஸ்
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர்.
பாஜகவை ஆதரித்தால் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியும். இவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இண்டியா கூட்டணி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆந்திரா முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கியுள்ளது என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஆந்திராவில்சந்திரபாபு நாயுடு அவர்களது வெற்றி பாராட்டத்தக்க ஒன்று. ஆணவமும், அரைவேக்காட்டுத்தனமும் நிரம்பியிருந்த ஜெகன், மோடியோடு சேர்ந்துகொண்டு ஆடிய தப்பாட்டத்திற்கான தண்டனையினை பெற்றுள்ளார். இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கியுள்ளது.
இந்திய அரசியலில் நிறைந்த அனுபவம் பெற்ற அவர் தன்னிடம் இருக்கும் துருப்புச்சீட்டுகளை சரியாகவே பயன்படுத்துவார் என்று நம்புகிறோம் காலை தொலைக்காட்சிகளில் அவர் மோடிக்கு ஆதரவளிக்க இருப்பதாக செய்தி வருகிறது. அது உண்மையானால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு வேண்டுகோள். ஆந்திராவின் முதலமைச்சராக அவரது மகன் நரேஷ் அவர்களை அமர்த்திவிட்டு சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்.
தென் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து தென் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பிரதமர் வட இந்தியராக இருக்கும்போது தென்னிந்தியாவின் ஒரு முக்கிய தலைவர் துணை பிரதமராக இருப்பது தென்னிந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதற்கான முன்னெடுப்பை செய்யவேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.