சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ள விவகாரம் தமிழக அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அதன் பிறகு வெளியிட உள்ள தகவல்கள் இந்திய அரசியலையே கதிகலங்கச் செய்யும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோவில்களில் இருக்கும் பொக்கிஷங்களான சிலைகள் பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் வந்த பிறகு தான் சிலை கடத்தல் மற்றும் அறநிலையத்துறையில் நடைபெற்று வரும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.

துவக்கத்தில் கோவில் பூசாரிகளில் கைது நடவடிக்கையை ஆரம்பித்த பொன்.மாணிக்கவேல் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையரான கவிதாவை கைது செய்துஇருக்கிறார். இது தான் ஒட்டு மொத்த தமிழக அரசையும் கதி கலங்க வைத்துள்ளது. அரசில் செயலாளர் அந்தஸ்தில் இருக்க கூடிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவை கைது செய்வதற்கு யாரிடமும் எந்த தகவலையும் சொல்லவில்லை.

நேராக அலுவலகத்திற்கு சென்று கவிதாவை கைது செய்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். மேலும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக பல அதிகாரிகளுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் எதிரான ஆதாரங்களை தீவிரமாக திரட்டி வருகிறார். பொன்.மாணிக்கவேல். மேலும் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து சில முக்கியஸ்தர்களை கைது செய்யும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளார் பொன்.மாணிக்கவேல். இந்த நிலையில் தான் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. அதிலும் பொன்.மாணிக்கவேல் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இது எல்லாம் நடக்கும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு தெரிந்தாலும் கூட தன் மீது நம்பிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியதை அவரால் ஏற்கமுடியவில்லை. இதனால் முடிந்த அளவிற்கு வரும் செப்டம்பர் மாதம் வரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவி நீடிக்க அவர் விரும்புகிறார்.

உயர்நீதிமன்றமும் சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக நீடிப்பார் என்று உத்தரவிடவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி எதிர்பார்தத்து நடக்காத பட்சத்தில், செப்டம்பர் மாதம் தான் ஓய்வு பெற்ற பிறகு, இந்த சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அத்தனை பேரின் பெயர்களையும் ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு வழங்க பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வெளியிடும் பட்டியலில் தமிழக முக்கியஸ்தர்கள் தொடங்கி டெல்லி முக்கியஸ்தர்கள் வரை இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.