Asianet News TamilAsianet News Tamil

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக ஆய்வு!

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறது

Central committee review cyclone Michaung chennai floods situation second day
Author
First Published Dec 13, 2023, 11:37 AM IST | Last Updated Dec 13, 2023, 11:37 AM IST

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 450 கோடி வழங்கியது. மேலும், மத்திய அரசின் சார்பில் ஒரு குழு தமிழகம் வந்து சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 11ஆம் தேதி இரவு மத்திய குழு சென்ன வந்தது.

மத்திய குழுவின் தலைவராக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்து வெள்ள சேதத்தை ஆய்வு செய்து வருகிறது.

அதன்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரி திமான் சிங், மத்திய மின்துறை இணை இயக்குனர் ரங்கநாத் ஆடம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பகுதியில் நேற்று தங்களது ஆய்வை மேற்கொண்டனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், ரேடியல் சாலை, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, தாம்பரம் - வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோல், வடக்கு பிரிவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் பவ்யா பாண்டே உள்ளிட்டோர் சேதம் அடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பட்டாளம், புளியந்தோப்பு, கணேசபுரம் சுரங்கபாதை, மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறது. கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் , வில்லிவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், பாடி மின் துணை நிலையம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையம், ஆவின் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது!

தங்களது ஆய்வினை இன்று முடிக்கும் மத்தியக் குழுவினர் நாளை (14.12.2023) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளனர். அதன்பிறகு, டெல்லி செல்லும் அவர்கள், மத்திய அரசிடம் இது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

முன்னதாக, மத்திய குழுவினர் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது, “புயல், வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிக அளவிலான மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது. இருப்பினும் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும், எதிர்பாராத விதமாகப் புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமானது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தை ஒப்பிடும்போது மிக விரைவாகச் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் உயிர்ச்சேதம் மிகவும் குறைந்துள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.” என்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios