மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது!
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருகிறது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி உப்பாலுடன் துபாய் சென்று, அங்கு கடை நடத்திக்கொண்டே சூதாட்ட செயலியை உருவாக்கி அங்கேயே பதிவு செய்து, இந்தியாவில் அதனை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல் (43) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று அவர் மீது இண்டர்போல் விசாரணை அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், அவர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் முதல் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இவர்களுக்கு தான் அழைப்பு!
மகாதேவ் ஆப் உரிமையாளர்களான சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோருக்கு சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள சிறப்புப் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில், கடந்த அக்டோபர் மாதம் பணமோசடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் ரூ.200 கோடி செலவு செய்து சவுரப் சந்திரகர் தனது திருமணத்தை நடத்தியுள்ளார். இதில், பாலிவுட் பிரபலங்கள் 17 பேர் கலந்து கொண்டனர். தனி விமானத்தில் அவர்கள் அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு, ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில், துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில், பாலிவுட் நடிகர்கள் சிலருக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பெரிய அரசியல்வாதிகள் முதல் உயர் அதிகாரிகள், உள்ளூர் போலீஸ்காரர்கள் வரை பலருக்கும் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுவதால், அமலாக்கத்துறை விசாரணை வலை விரிவடையும் போது, மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளது.