அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இவர்களுக்கு தான் அழைப்பு!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதனை அம்மாநில அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புதிய கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும், அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் போன்ற பிரமுகர்களுக்கு ராமர் கோயில் அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. இந்த மதிப்பிற்குரிய விருந்தினர்களின் பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 50 வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த கரசேவகர்களின் குடும்பங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன்படி, பிரதமர் மோடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, நடிகர் அருன் கோவில், நடிகை தீபிகா சிக்கலியா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ், ஆர்,எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. 3000 விவிஐபிக்கள், 4000 துறவிகள் உட்பட சுமார் 7000 பேருக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. அரசியல்வாதிகள், நான்கு முக்கிய இந்து மடங்களின் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிற மதத் தலைவர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.