வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைப்பு!
வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல், மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு, கர்நாடகா, பிஹார், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களைக் கவரும் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அதன்படி, சென்னை ஜிஎஸ்டி மண்டலம், ஒவ்வொரு ஆணையரகத்திலும் போதிய அளவு பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளன. இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்கவும், தேர்தல் நடைமுறைகளின்போது வாக்காளர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து குழுக்களும் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் கண்காணித்து, புடவைகள், மின்சாதனங்கள், பாத்திரங்கள், ரொக்கம் போன்றவற்றை இருப்பு வைப்பதைத் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024: பாமக உத்தேச தொகுதிகள், வேட்பாளர் பட்டியல்!
சென்னை ஜிஎஸ்டி மண்டலத்தில் உள்ள அனைத்து ஆணையரகங்களும், சிபிஐசியால் அமைக்கப்பட்ட பல்வேறு செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் நடமாட்டம் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறை விவரம்; தொலைபேசி எண் – 044- 24360140 / மின்னஞ்சல் loksabhaeleche-2024@gov.in ; புதுச்சேரி கட்டுப்பாட்டு அறை விவரம்; தொலைபேசி 0413-2221999 மின்னஞ்சல் help-pycgst@gov.in
முன்னதாக, நடைபெறவிருக்கும் 2024ம் ஆண்டுக்கான மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண் / மின்னஞ்சல்/ வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669; மின்னஞ்சல் tn.electioncomplaints2024incometax.gov.in; வாட்ஸ் அப்: 94453 94453 எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.