cellphones caught from murugan

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம் கார்டுகளை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், மற்றொரு குற்றவாளியான நளினி, முருகனின் மனைவி.

தற்போது முருகன், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் உள்ளனர். வாரத்தில் ஒருமுறை கணவன், மனைவி சந்திப்பு நடந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக புழல், வேலூர் உள்பட பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன், கத்தி, அரிவாள் ஆகியவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை சிறை அதிகாரிகள், வேலூர் சிறைச்சாலையில், அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில், தனியாக பேசி கொண்டிருப்பது தெரிந்தது.

உடனே அதிகாரிகள் சென்று பார்த்தபோது, அங்குள்ள சாமி படங்கள் முன் பிரார்த்தனை செய்வது போல் இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சாமி படங்களுக்க பின்புறம், 2 செல்போன்கள், 3 சிம் கார்டுகள், சார்ஜர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள முருகன் அறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் வைத்திருந்தது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறை கேன்டீனில் இருந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது உள்பட முருகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சில சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில், முருகனுக்கு செல்போன்கள், சிம் கார்டுகள் எப்படி கிடைத்தது. அதை அவருக்கு கொடுத்தது யார். சிறை அதிகாரிகளா, காவலர்களாக...? யார் அந்த கருப்பாடு என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதையொட்டி, வாரம் ஒருமுறை மனைவியை சந்திக்கும் முருகனுக்கு, இனி அந்த சலுகையும் பறிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நளினியின் சிறை அறையில் இருந்தும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள வேலூர் மத்திய சிறையில், கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.