மாநிலங்களவை எம்.பி.யானர் இசையமைப்பாளர் இளையராஜா... திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!!
மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு முதன்முதலாக அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தார். அப்போது தான் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அன்று முதல் தற்போது வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறிப்பினர்களாக இளையராஜா, பி.டி.உஷா நியமனம்… பிரதமர் மோடி வாழ்த்து!!
இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவருக்கு தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பி பதவியை பெற்றுத்தந்துள்ளது.
இதையும் படிங்க: எம்.பி பதவி இப்படித்தான் கிடைச்சதா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஒன்றுதிரண்ட பாஜக - ட்விட்டரில் போர் !
பிரதமர் மோடி:
பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இசையமைப்பாளர் இளையராஜா, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்துள்ளார். அவரை ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்:
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது வாழ்த்து செய்தியில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன்:
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்:
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.