கர்நாடகா செய்வது நியாயமல்ல: துரைமுருகன்!
காவிரி விவகாரத்தில் கர்நாடகா செய்வது நியாயமல்ல என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருவதற்கிடையே, காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது. அதில், தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் இருந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் தமிழகத்திற்கு வழங்க கூடிய அளவிற்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் தர மாட்டேன் என்று சொல்வது நியாயமல்ல என்றார்.
விவசாயத் தலைவர்களை சந்திக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா!
ஒரு ஆற்றினுடைய போக்கில் டைல் எண்ட் என சொல்லப்படும் கடைமடை பகுதிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய துரைமுருகன், இந்த இயற்கை நீதியையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; காவிரி ஒழுங்காற்றுக் குழு செல்வதையும் கேட்பதில்ல; உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதில்லை; காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், “அண்டை மாநிலங்கள் அதுவும் ஒன்றோடொன்று ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்கள் நாம். இங்கு இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான கர்நாடக மக்கள் இங்கே வாழ்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழும் மக்கள் பயம் இன்றி வாழ வேண்டும். காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் மதிக்க மாட்டேன் என்று சொல்வது நியாயமல்ல. ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.” என்றார்.