காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. 

காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. அப்போது தமிழகம் அரசு சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை கர்நாடகம் காவிரியிலிருந்து 53.27 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இதுவரை கிடைத்துள்ளது. பற்றாக்குறையான 37.48 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடகத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.

இதையடுத்து, நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் திறந்து விட்டிருக்க வேண்டிய 28.8 டி.எம்.சி நிலுவை தண்ணீரையும் திறந்து விட உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் மாதம் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் கால தாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், காவிரி நதி நீர் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று முறையீடு செய்தார். ஆனால், இந்த முறையீட்டை பதிவுத்துறையில் முன்கூட்டியே பதிவு செய்து அதன்பின்னர் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தினர்.