Asianet News TamilAsianet News Tamil

தண்ணீர் திறந்தது கர்நாடகா - ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது

cauvery opened-by-karnataka
Author
First Published Oct 6, 2016, 12:04 AM IST


கர்நாடக அரசு காவிரி தண்ணீரை திறந்து விட்டதால், ஒக்கேனக்கல் வழியாக, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 75.41 அடியாக உள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வராத நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் காலை 796 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, நேற்று காலை 749 கனஅடியாக சரிந்தது. மேலும், டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

இதனால், ஒரு நாளைக்கு ஒரு அடி வரை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 76.46 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 75.41 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 37.35 டிஎம்சியாக உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் வரத்தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில், நேற்று மாலை 6 மணியளவில் நீர்வரத்து 9700 கனஅடியாக இருந்தது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும் என்பதால், நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios