விழுப்புரம்

மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் விழுப்புரத்தில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 845 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஐந்து இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. 

விழுப்புரம் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் திரண்டனர். அப்போது காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் விரைவு இரயில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. 

அந்த இரயிலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறிக்க முயன்றனர். அப்போது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், துணைச் செயலாளர்கள் சௌரிராஜன், ராமசாமி, பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், அப்பாவு, சின்னசாமி உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, சின்னசேலத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் உதய சூரியன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.-அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 365 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று, திண்டிவனம் இரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு இரயிலை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மயிலம் எம்.எல்.ஏ. மருத்துவர் மாசிலாமணி, திண்டிவனம் எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், டாக்டர் சேகர், வழக்கறிஞர் அசோகன், அருணகிரி, ஒன்றிய செயலாளர்கள் ஓலக்கூர் ராஜாராம், 

மயிலம் மணிமாறன், வல்லம் அண்ணாதுரை, செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் நெடுஞ்செழியன், காங்கிரசு நகர தலைவர் விநாயகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், செல்வசீமான், ம.தி.மு.க. ஏ.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சி முகம்மது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

அதேபோன்று, உளுந்தூர்பேட்டை நகர் இரயில் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் இரயில் மறியலில் ஈடுபட்ட 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் இரயில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவிரி பிரச்சனைக்காக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஐந்து இடங்களில் நடைப்பெற்ற இந்த இரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 845 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.