Cauvery Calling: தமிழகத்தில் 13.4 கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. 2026-27 நிதியாண்டில், 1.2 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கம் இதுவரை 13.4 கோடி மரக்கன்றுகளை நடவும், 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறவும் உதவியுள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டில், 1.2 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கம் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சத்குருவின் வழிகாட்டுதலில், விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படும் 'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கம், காவேரி நதிக்கு புத்துயிர் அளிப்பத்தையும், மரம் சார்ந்த விவசாயம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் இயக்கமாகும்.
காவேரி கூக்குரல் மூலம் 13.4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது
கடந்த 70 ஆண்டுகளில் காவேரிப்படுகை 87% மரங்களை இழந்ததால், அதன் நீர்வரத்து 40%-க்கும் மேல் குறைந்துவிட்டது. இதற்குத் தீர்வாக, தனியார் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நட இந்த இயக்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, மண் வளமும் நிலத்தடி நீரும் அதிகரிக்கும். மேலும், காவேரியை சார்ந்திருக்கும் 8.4 கோடி மக்களுக்காக, ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடவும் இது பெரும் துணையாக இருக்கும்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று (மே 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மண் காப்போம் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எதிராஜலு பேசுகையில், “13 கோடி மரங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அது 2.6 லட்சம் விவசாயிகள் தங்களது விவசாய முறையை நிரந்தரமாக மாற்றியுள்ளதை காட்டுகிறது. ஒற்றைப் பயிர் சாகுபடியில் இருந்து மரம் சார்ந்த விவசாயத்திற்கு ஏற்பட்ட இந்த மாற்றமே, வரும் காலங்களில் காவேரி ஆறு ஆண்டு முழுவதும் ஓடுவதைத் தீர்மானிக்கும். அரசுக் கொள்கைகளும் விவசாயிகளும் ஒன்றிணைந்தால், இந்தியாவின் மண் வளம், நீர்வளம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை நிச்சயம் பலப்படுத்த முடியும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-heavy-rain-alert-rain-to-lash-niigiris-coimbatore-and-other-districts-till-june-1-ebbn59g
விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் உதவி
'மண் காப்போம்' இயக்கம், 3 முக்கிய முன்னெடுப்புகள் மூலம் களத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் காவேரி கூக்குரல் இயக்கம். அடுத்தது, 'மண் காப்போம் மீளுருவாக்கப் புரட்சி'. இதன் மூலம் அறிவியல் பூர்வமான இயற்கை விவசாய முறைகளில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொன்று, 'மண் காப்போம் உழவர் இயக்கம்'. இது விவசாயிகளை 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக' ஒருங்கிணைத்து, அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் பொருளாதாரத் திறனையும் மேம்படுத்துகிறது.
இந்த 3 திட்டங்களும் இணைந்து விவசாயிகளுக்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதோடு சமூகப் பங்களிப்பை ஏற்படுத்துகிறது. இது மண்ணின் ஆரோக்கியம், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகின்றன” என்று கூறினார்.
‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் வழிகாட்டுதல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 58 வயதான ஐ.நா. விருது பெற்ற விவசாயி வள்ளுவன் பேசுகையில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே என்னுடைய நிலம் அமைந்திருக்கிறது. மண் காப்போம் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில், நான் மரம் சார்ந்த பலபயிர் பல அடுக்கு சாகுபடி முறையில் விவசாயம் செய்கிறேன். எனக்கு, 2024 ஆம் ஆண்டு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நடத்திய 'மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள்' என்ற விவசாயிகளுக்கான போட்டியில் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு ‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கம் தந்த வழிகாட்டலே முக்கிய காரணம்.
வருமானம் 6 மடங்கு அதிகமானது
நிலத்தை அதிகமாக உழாமல் இருப்பது, மூடாக்கு போடுவது மற்றும் உரப்பயிர்களை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகளால் என்னுடைய நிலத்தில் மண் வளம் (கரிம கார்பன்) உயர்ந்தது. முன்பு தென்னை மட்டுமே பயிரிடப்பட்ட ஒற்றைப் பயிர் சாகுபடி நிலமாக இருந்த என் தோட்டத்தை, பல வகை மரங்கள், மிளகு, பழச்செடிகள் நிறைந்த ‘உணவுக் காடாக’ மாற்றினேன். இந்த முறையால் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் செலவு குறைந்தது. அதோடு, வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களைத் தாங்கும் வலிமையும் நிலத்திற்குக் கிடைத்தது. இதன் மூலம், அடுத்தடுத்த ஆண்டுகளில் வருமானமும் ஆறு மடங்கு அதிகமானது'' என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி!https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-crop-loan-waiver-2026-farmers-debt-relief-scheme-details-6epgo4c
தமிழ்நாட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி நர்சரிகள்
காவேரி கூக்குரலின் கள செயல்பாடுகள் குறித்து ஆனந்த் கூறுகையில், “தரமான மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக தமிழ்நாட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி நர்சரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரியதும், முழுமையாக பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் கடலூர் நர்சரியில் ஆண்டுக்கு 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நர்சரியில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த இரண்டு நர்சரிகளும் இணைந்து தமிழ்நாட்டில் 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவில் 8 மையங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்குகின்றன. தேக்கு, செம்மரம், ரோஸ்வுட், மகோகனி போன்ற 29 உயர்மதிப்புள்ள மரங்கள் உட்பட மொத்தம் 54 வகையான மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் மரவகை கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.5-க்கும், பழ மற்றும் பூவகை கன்றுகள் ரூ.10-க்கும் வழங்கப்படுகின்றன.
200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள்
கள செயல்பாடுகளுக்காக 200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 26,500-க்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று, மரங்கள் நடுவதற்கு முன்னும் பின்னும் இலவச ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த ஆலோசனைகளில் மண்ணின் தன்மை, ஆழம், நீர் ஆதாரம் மற்றும் அதன் தன்மைகள் ஆராயப்பட்டு, அந்தந்தப் பகுதியின் காலநிலைக்கும் விவசாயிகளின் வருமானத்திற்கும் ஏற்ற மரவகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
காவேரி கூக்குரல் இயக்கம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் (NGOs), கிருஷி விஞ்ஞான் கேந்திராக்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வேளாண் கண்காட்சிகள் மூலமாக விவசாயிகளை சென்றடைகிறது. இதனால் மரம் சார்ந்த விவசாயம் பற்றிய விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் 225 வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் 60,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நிபுணர்கள் அறிவுரை
2025 ஆம் ஆண்டில், காவேரி கூக்குரல் இயக்கம் 14,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 3 மிகப்பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), கேரளா வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI), இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பேரவை (ICFRE), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று, மரம் சார்ந்த விவசாயம் குறித்த நடைமுறை அறிவுகளை விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டனர்.
மண் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும் 'மீளுருவாக்க வேளாண்மை' திட்டம் மூலமும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31, 2026 நிலவரப்படி, இந்தத் திட்டம் மூலம் 532 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, 40,311 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள் கற்றுத்தரப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட ஏதுவாக 54,982 விவசாயிகள் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வழியாக அதிவேக விழிப்புணர்வு
கடந்த 3 ஆண்டுகளில், 185 விவசாயிகளுக்கு 3 மாத கால நேரடி இயற்கை விவசாயக் களப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாகவும் இந்த விழிப்புணர்வு பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் யூடியூபில் பதிவேற்றப்பட்ட 1,260 தொழில்நுட்ப வீடியோக்கள், இதுவரை 296 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. மேலும், 11 லட்சத்திற்கும் அதிகமான (11,83,000) சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்த யூடியூப் தளம், விவசாயிகளுக்குப் பெரும் துணையாக இருந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.


