Caste fanatics who marry a couple with a coincidence of marriage caste

தஞ்சாவூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை பெண்ணின் வ் பெற்றோர் அடியாட்களோடு வந்து சாதிப்பெயரை திட்டி உருட்டுக்கட்டை, கற்களால் கொடூரமாக தாக்கினர். காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஜோடி புகார் கொடுத்ததால் மணமகளின் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அருகே உள்ளது கரந்தை. இங்குள்ள மேலக்குருவிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் ராஜேஷ் (22). பி.பி.ஏ. படித்துள்ள இவர் மினி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இவரும் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் பகுதியைச் சேர்ந்த வீரராசு மகள் அபிநயா (22) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நேற்று காலை அபிநயாவும், ராஜேசும் பாபநாசத்துக்கு வந்தனர். இருவரும் மணக்கோலத்தில் பாபநாசம் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள துர்க்கையம்மன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ராஜேசும், அபிநயாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் தகவல் அபிநயாவின் குடும்பத்துக்குத் தெரிந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சுமார் 10 பேருடன் கார், மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாட்டில் இருந்து பாபநாசத்துக்கு வந்தனர்.

திருமணத்துக்கு பின் ராஜேசும், அபிநயாவும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பாபநாசத்தை அடைந்த அபிநயாவின் உறவினர்கள் மணக்கோலத்தில் இருந்த அபிநயாவை கண்டு ஆத்திரமடைந்து அபிநயா மற்றும் ராஜேசை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். ராஜேசின் பட்டு வேட்டி - சட்டையை கிழித்து எரிந்தனர்.

மேலும் அருகே இருந்த ராஜேசின் அண்ணன் தினேசின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகே பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர்.

திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலால் நிலைகுலைந்த காதல் ஜோடியினர் இந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி அருகே இருந்த பாபநாசம் காவல் நிலையத்துக்குள் புகுந்தனர். தலைவிரி கோலத்தில் பெண்ணும் ஆடைகள் கிழிந்த நிலையில் வாலிபர் ஒருவரும் திடீரென காவல் நிலையத்துக்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த காவலாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து நடந்த விவரங்களை கேட்டனர்.

அப்போது காதல் ஜோடியினர், தங்களுக்கு அரை மணிநேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்ததையும், தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறினர்.

இதுகுறித்து பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் காதல் திருமண ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் தன்னை தாக்கியவர்கள் ஜாதியின் பெயரை கூறி தன்னை திட்டியதாக கூறி உள்ளார். இதன்பேரில் காவலாளர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.