விழுப்புரம்
 
விழுப்புரத்தில், இலஞ்சம் வாங்கிய சின்னசேலம் சார்பதிவாளர் உள்பட ஐந்து பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்த காவலாளர்கள்  இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து இலஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள், சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது சார்பதிவாளர் சந்திரா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 இலட்சத்து 30 ஆயிரத்து 730-ஐ காவலாளர்கள் கைப்பற்றினர்.  மேலும், அந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும் காவலாளர்கள் கைப்பற்றினர். 

பின்னர், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் சந்திரா, ஆவண எழுத்தர் முருகேசன், அலுவலக உதவியாளர் சோலைமுத்து, ஆவண எழுத்தரின் உதவியாளர் சரத்குமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

அவையாவன: ‘அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், அரசு பணியை செய்வதற்கு கையூட்டு கேட்டு பெறுதல்’ ஆகியவை. 

மேலும், இவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக தனியார் தட்டச்சு நிறுவன உரிமையாளர் சுரேஷ் என்பவர் மீதும் இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் நேற்று வழக்குப்பதிந்தனர். காவலாளர்கள் இதுகுறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.