சனாதன தர்மம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு!
சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை தாக்கு!
பீகார் மாநிலம் அர்ராவில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 298இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணையின்போது, நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. ஒரு அமைச்சர். உங்களது பேச்சினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.