ஈரோட்டில் நடைபெற இருந்த புதுமனை புகுவிழாவிற்கு சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு ஈரோடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
புதுமனை புகுவிழா
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்தவர் ராணாராம் (52). இவர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக, உறவினர்களான ஜோத்திதேவி (55), ஜோகிதேவி (55), சோகாராம் (50), அம்யாதேவி (42), ஜோக்கி (50) ஆகியோருடன் நேற்று காலை காரில் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு ஈரோட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். காரை பெல்லாரியை சேர்ந்த ஒட்டுநர் ஜோதாராம் (62) என்பவர் ஓட்டிச் சென்றார்.
கார் விபத்தில் 4 பேர் பலி
சென்னை-சேலம் பைபாஸ் சாலையில் ஆத்தூரை கடந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஒடி பாலத்தின் இடதுபுற சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ராணாராம், ஜோகிதேவி, ஜோதாராம், ஜோதிதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட கார்
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த கார் சாலையில் இருந்து புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.