Cannabis virravarkalai tree tying pale people Tiruppur purchased ...

அனுப்பர்பாளையம்

திருப்பூர் பிச்சம்பாளையம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டு, பெண்களை கிண்டல் செய்த இருவரை மரத்தில் கட்டி வைத்து, பொதுமக்கள் அடித்து வெளுத்தனர்.

திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையத்தை அடுத்த குமாரசாமிநகரைச் சேர்ந்த தம்பதி, இரண்டு இளைஞர்களை வைத்து கஞ்சா விற்று வந்தனர்.

அந்த இளைஞர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பெண்களை கிண்டல் செய்வதும், அப்பகுதி மக்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையானது.

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களை ஏற்கனவே பலமுறை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த இளைஞர்கள் இருவருக்கும் அந்தப் பகுதி பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சினம் கொண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் அடித்து வெளுத்துள்ளனர்.

மேலும் அவர்களுடைய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் அடித்து தூள் தூளாக நொறுக்கினர்.

பின்னர் அவர்களை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைக்க முயற்சித்தபோது ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் மக்கள், இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்தவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் தம்பதி தாங்கள் குடியிருந்த வீட்டைப் பூட்டி விட்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் விற்றுக் கொண்டும், பெண்களை வழிமறித்து தகராற்றில் ஈடுபட்டும் வந்த இளைஞர்களை பொதுமக்கள் அடித்து வெளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.