தஞ்சாவூர்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரியலூரைச் சேர்ந்த நபர் நேற்று தஞ்சாவூருக்கு வந்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் மோட்டார் சைக்கிளில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் இப்பிரச்சார பயணத்தைத் தொடங்கினார்.

இதனையடுத்து, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்குச் சென்ற அவர் நேற்று தஞ்சாவூருக்கு வந்தார்.

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், இரயிலடிக்குச் சென்று பிரச்சாரம் செய்த இவர் தற்கொலை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மோட்டார் சைக்கிளில் தட்டிகளை மாட்டியும் சென்றார்.

மோட்டார் சைக்கிளில் பிரச்சாரம் செய்துகொண்டு வந்த இவரது பிரச்சாரத்தை, பேருந்து நிலையத்தில் இருந்த அனைவரும் கேட்டறிந்தனர். மற்றும் ஒருசிலர் இவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.