ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்றும், அந்த குறிப்பிட்ட ஆம்னி பேருந்துகளின் உரிம்ம் ரத்து செய்யப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இருந்து வெளியூருக்கு செல்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூருக்கு செல்வோரின் எண்ணிக்கை சாதாரண நாட்களை விட அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்தகைய பேருந்துகளுக்கு ரூ. 42 லட்சம் வரை அபராதம் விதித்து வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுவரை 55 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

கூடுதல் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி தராவிட்டால் பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தேவைகளுக்கு ஏற்ப ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகபடுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.