50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு நமது கட்சிக்கு வந்துள்ள அண்ணன் செங்கோட்டையனுக்கு துளி அளவும் மரியாதை குறைபாடு ஏற்பட்டுவிடக் கூடாது என தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், செங்கோட்டையனால் அங்கு நீண்ட காலம் பயணிக்க முடியாது. அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். மேலும் மரியாதையை எதிர்பார்க்கக்கூடிய நபர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் பெரும்பாளானவர்கள் இளைஞர்கள். அவர்கள் தற்போது வரை அரசியல் படுத்தப்படவில்லை. ஆகையால் அவர்கள் செங்கோட்டையனின் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இதனால் அவர் விரைவில் அங்கிருந்து வெளியேறிவிடுவார் என செய்திகள் பரவின.
மேலும் கட்சியின் மூத்த தலைவர்களாகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன் என இவர்களுக்குள்ளேயே அதிகார மோதல் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “எந்தவொரு விசயமாக இருந்தாலும் அண்ணன் செங்கோட்டையன் மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்வது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
அண்ணன் செங்கோட்டையனை அடிக்கடி புகழ்ந்து பேசுகிறேனே என நினைக்க வேண்டாம். எங்கள் தளபதி அண்ணன் செங்கோட்டையனை பார்த்து, அண்ணனுக்கு எந்தவித சிறிய மரியாதைக் குறைவும் ஏற்பட்டுவிடக் கூடாது என கட்டளையிட்டுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயணித்த கட்சியை விட்டுவிட்டு அவர் தற்போது நம் கழகத்திற்கு வந்துள்ளார். அவர் மந்திரியாக இருந்தபோது பல பள்ளி, கல்லூரிகளுக்கு இடம் வழங்குதல், பல நல்ல திட்டங்களை உருவாக்குதல் என பல விசயங்களை செய்துள்ளார்.
நான் அண்ணனிடம் சொல்வது ஒன்றே ஒன்று தான். கண்டிப்பாக நாங்கள் தளபதி பின்னாலும், உங்கள் பின்னாலும் நாங்கள் இருக்கிறோம். 2026ல் தளபதி முதல்வராவது உறுதி. அண்ணா தெளிவா சொல்றேன். நீங்க என்ன சொன்னாலும் அதனை நாங்கள் கேட்டு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.


