ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி வரும் 15–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒன்றரை  லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது  வழக்கம். இந்நிலையில் 12–வது ஊதிய ஒப்பந்தம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு  வரவேண்டிய 13–வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7–ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

2–வது கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 4–ந் தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்  15–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இந்த  போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தும் வகையில், நேற்று மீண்டும்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

3 ஆவது கட்டமாக  நடைபெற்ற இந்து பேச்சுவார்த்தையும்  தோல்வி அடைந்ததால், திட்டமிட்டப்படி வரும் 15 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.