வேதாரண்யத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்ததில் பயணி ஒருவர் பலியானார். 16 பேர் படுகாயமடைந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் ஒரு அரசு பேருந்து சென்னையை நோக்கி புறப்பட்டது. இப்பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

இப்பேருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் அருகே திருவிடந்தை என்ற இடத்தில் வரும்போது டிரைவர் லேசாக கண்ணயர்ந்துவிட்டார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அரசு பேருந்து சாலையின் எதிர்ப்புறமாக வேகமாக பாய்ந்தது.

பின்னர் அங்குள்ள சாலையோர பள்ளத்துக்குள் இறங்கி, அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த மின்கம்பம் அரசு பேருந்தின் மீது சரிந்தது. இதைப் பார்த்ததும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் வசித்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் மின்வாரியத்துக்கும் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மின்கம்பத்துக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். 

இதற்கிடையே பஸ்ஸின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.இவ்விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த திருத்துறைப்பூண்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் (20) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், பஸ் டிரைவர் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 16 பேரையும் மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் பலியான விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.