பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 17வது வார்டாக அமைந்துள்ள பகுதி கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், புழல் ஒன்றியம் வடபெரும்பாக்கம் ஊராட்சியில் இருந்தது.
அந்த நேரத்தில், இந்த பகுதியில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வசித்தனர். அவர்களுக்கு, விஸ்வநாததாஸ் நகரில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், இங்கு சலவை தொழிலாளர்களுக்காக 150க்கு மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
இந்த வீடுகளை பராமரிக்கும் பணியை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மேற்கொண்டு வந்தது. இப்பகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகியவற்றை ஊராட்சி நிர்வாகம் செய்து வந்தது. இதனால், பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பகுதி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சென்றதால், எவ்வித அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு சென்றடையாமல் போனது. இதனால், பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
சலவை தொழிலாளர்களின் வீடுகளை பராமரிக்கும் பணியை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிறுத்தியது. இதனால், வீடுகள் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
வீடுகளை இழந்த மக்கள், பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதையொட்டி, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில், மழை காலங்களில் முழுவதுமாக தண்ணீர் ஒழுகுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன், இங்கு ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பகல் நேரம் என்பதாலும், அந்த நேரத்தில் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்தும், உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, அதிகாரிகளோ யாரும் வந்து பார்வையிடவில்லை. பொதுமக்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இதனால், மீதமுள்ள வீடுகளில் வசிப்போர் அச்சத்துடனும், பயமுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், மேற்கண்ட பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
