சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களின் விடுதலை செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த 2004-ம் முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்பை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2013-ம் ஆண்டு சிபிஐ சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழுமத்தின் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் சி.பி.ஐ நீதிமன்றம் விடுவித்தது. இதில் மொத்தம் 4 பேருக்கு மட்டுமே விடுதலை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சிபிஐ மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கலாநிதிமாறன் உள்ளிட்டோரின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். சிபிஐ நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் தொடங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.