கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அஞ்செட்டி - ஒகேனக்கல் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் தொட்டஅள்ளா ஆறு செல்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே போக்குவரத்து நடந்தது.

கடந்த மே மாதம் குந்துகோட்டை, அருளாளம், காரண்டப்பள்ளி பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் அந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தற்காலிக தரைப்பாலம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு மீண்டும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு இரவோடு இரவாக சரி செய்யப்பட்டது.

அதன்பின்னர் கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் பலத்த மழை தேன்கனிக்கோட்டையை சுற்றி ஆறுகளிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல தொட்டஅள்ளா ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் மீண்டும் உடைந்து மழை வெள்ளத்தில் அந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதனால் அஞ்செட்டி சுற்று வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொடர் மழை காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் நாட்றாம்பாளையம், கேரட்டி, தொட்டமஞ்சி, ஜேசுராஜபுரம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல், பென்னாகரம் சுற்று வட்டார பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.