வேலூர் மாவட்டம் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பினார். 

இப்பணிக்கு  10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது. காண்ட்ராக்டரிடம் பில் தொகையை பாஸ் செய்ய வேண்டும் எனில் அதில் தனக்கு இரண்டு சதவீதம் கமிஷன்  தரவேண்டும்  என்று  மாநகரட்சி ஆணையர் குமார் கான்ட்ராக்டர் பாலாஜியிடம் கேட்டுள்ளார். 

அதற்கு பாலாஜி கொடுக்க மறுக்க ஆணையர் குமார் பில்லை பாஸ் செய்ய முடியாது என்று கூறி பல நாட்களாக இழுத்தடித்து வந்துள்ளார். தினமும் மாநகராட்சி அலுவலகம் சென்று வந்த பாலாஜி ஆணையர் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

மாநகராட்சி கேட்ட இரண்டு சதவீத தொகையான 22 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பாலாஜியிடம் கொடுத்து ஆணையரிடம் கொடுக்க கூறியுள்ளனர். பாலாஜி கொண்டு சென்ற பணத்தில் ரசாயண கலவை பூசப்பட்டிருந்தது. அதை மாநகராட்சி ஆணையர் குமார் பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். 

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.