Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் இருந்து பெறப்படும் தாய்ப்பால்; பவுடராக்கப்பட்டு தமிழகத்தில் விற்பனை - விசாரணையில் பகீர் தகவல்

கர்நாடகா மாநிலத்தில் தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பால் தமிழகத்தில் பாட்டில் பாலாகவும், பவுடர் வடிவிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Breast milk sold in Tamil Nadu was imported from Karnataka Officers information vel
Author
First Published Jun 3, 2024, 7:19 PM IST | Last Updated Jun 3, 2024, 7:19 PM IST

கர்நாடக மாநிலத்தில் தாய்மார்களிடம் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தாய்பால் பெறப்பட்டு, பதப்படுத்தப்பட்டப் பின்னர் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பதப்படுத்தப்பட்ட தாய்பாலை வாங்கிப் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் தெரிவித்தார். 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆர் கே பார்மா என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் தாய்ப்பாலை பதப்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி  சதீஷ்குமார் தலைமையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பதப்படுத்தப்பட்ட தாய்பால் பாட்டில் 380, பதப்படுத்தப்பட்டு பவுடர் வடிவிலான பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தாய்பாலை விற்பனை செய்யக்கூடாது என கூறியதுடன், மருந்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு தாய்ப்பால் கடந்த ஒராண்டாக விற்பனை செய்யப்பட்டவற்றின் பட்டியலையும் பெற்றனர்.

வயிறு எரிகிறது; கருத்து கணிப்பு வெளியீடுகளால் கடுமையான அப்செட் மோடில் ஆர்.பி.உதயகுமார்
  
அதன் பின்னர் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி  சதீஷ்குமார்  கூறும்போது, மத்திய அரசு சார்பில் வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது.  இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது அரும்பாக்கம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வில், சட்ட விரோதமாக 380 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் தாய்ப்பால்கள் பவுடர் வடிவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பவுடர் வடிவில் தாய்ப்பால்கள் தமிழகத்தில் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். பறிமுதல் செய்யப்பட்ட பாட்டிலில், ஒரு வருடம்  இந்த தாய்ப்பால் பயன்படுத்தலாம் என்பது போன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஊட்டசத்து போன்ற இணைப்பொருட்கள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு துறை சார்பில் எந்த ஒரு சான்றிதழ்களும் பெறாமலே இந்த தாய்ப்பால் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் தாய்ப்பால்கள் 1239 ரூபாய்க்கும் ஒரு பாட்டிலும் 900 ரூபாய்க்கு ஒரு பாட்டிலும் என இரண்டு விதங்களில் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. தாய்ப்பால் மாதிரிகளை சேகரித்து லேப்பிற்கு அனுப்பி அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தாய்ப்பால்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரோ ஒருவரின் கட்டளையின் படி கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன - அமைச்சர் அதிருப்தி

இந்த தாய்ப்பால்கள் அனைத்தும் கர்நாடகாவில் இருக்கக்கூடிய பெரு நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் விநியோகத்தராக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பல மருத்துவமனைகளுக்கு தாய்ப்பால் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அந்த அடிப்படையில் மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். மருத்துவமனைகளிலும் வணிகரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் அங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கர்நாடக பெரு நிறுவனத்தின் மீது இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். அதேபோல் இந்த மருந்தகத்தின் மீதும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தாய்ப்பால்கள் மற்றும் பவுடர்கள் கைப்பற்றப்பட்டு அந்த குளிர்சாதனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும். சென்னையில் வணிக ரீதியில் தாய்ப்பால்கள் விற்பனை செய்யப்படுவது குற்றம். அப்படி செயல்பட்டால் நூறு சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். 

தாய்மார்களுக்கு குழந்தைப் பிறந்தப் பின்னர்  தாய்பால் சுரக்கும். அவர்கள் அதனை அரசு மருத்துக்கல்லூரியில் உள்ள தாய்பால் வங்கியில் கொடுக்கலாம். அது முறையாக பராமரிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும். தாய் பால் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிக்கலாம். 

இந்த நிறுவனத்தில் விசாரணை செய்ததில், முதல்கட்டமாக கர்நாடகாவில் தாய்மார்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் அணுகி அவர்களிடம் பணம் கொடுத்து பால் பாட்டிலில் அடைத்தும், பவுடராக செய்தும் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios