விருதுநகர்

அறிவையும், ஒழுக்க நெறிகளையும் வளர்க்கும் புத்தகம் வாசிப்பதை அனைவரும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக வைக்க வேண்டும் என்று விருதுநகரில் நடைபெற்ற நூலகர் தின விழாவில் ஆட்சியர் சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சார்பில் நூலகர் தின விழா ஆட்சியர் சிவஞானம் தலைமையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு நூலகர்கள் மற்றும் வாசகர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை ஆட்சியர் சிவஞானம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியது: “இந்திய நூலகவியலின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாள், நூலகர் தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதன் அடிப்படையில் நூலகர்கள் சிறப்பான முறையில் சமூக சேவையாற்றிடவும், நூலகர்கள் புத்துணர்வோடு பணியாற்றிடவும், நூலகர் தின விழா நூலகத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், நூலகர்கள் ஆகியோர் கொண்டாடி வருகின்றனர்.

நூலக அலுவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில், நூலகர் தின விழாவினை முன்னிட்டு நூலக அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்க குழந்தைகளுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நூலகத்தில் பயின்ற பலர், நாட்டின் தலைசிறந்த அறிஞர்களாகவும், மேதைகளாகவும் திகழ்கிறார்கள்.

புத்தகங்கள் வாசிப்பதால் அறிவு வளர்கிறது, ஒழுக்க நெறிகளும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, அனைவரும் புத்தகம் வாசிப்பதை அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக வைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நூலர்களுக்கான நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட மைய நூலகர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.