அபாயகரமான ப்ளூவேல் விளையாட்டை தடை செய்து நாட்டின் எதிர்கால சிற்பிகளான குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் ப்ளூவேல் விளையாட்டு தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவுக்குள் நுழைந்த இந்த ப்ளூவேல் விளையாட்டு, தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இந்த விளையாட்டால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவரின் துயரச் செய்தி அடங்கும் முன்பே புதுச்சேரியில் ஒரு மாணவர் உயிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

குழந்தைகள், லேப்டாப், ஸ்மார்ட்போன்ஸ், டேப்லட் பயன்படுத்துகையில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக்கோரி, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ப்ளூவேல் விளையாடியதால், மதுரை திருமங்கலம் அருகே விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், அபாயகரமான விளையாட்டைத் தடை செய்து நாட்டின் எதிர்கால சிற்பிகளான குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகம், ப்ளூவேல் விளையாட்டை முடக்க வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.