விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த ரத்தத்தை தானம் செய்த வாலிபர், தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்ச பெற்று வருகிறார். இச்சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வாலிபர், சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இவர், 3 மாதங்களுக்கு ஒருமுறை, அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்வது வழக்கம். இதையொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன் ரத்த தானம் செய்தார். 

இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன், வெளிநாட்டில் வாலிபருக்கு வேலை கிடைத்தது. அதற்கான பரிசோதனை செய்ய ஆய்வகம் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையறிந்த அவர், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, தனது நிலைமையை கூறியுள்ளார். மேலும், அவர் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

அதற்கு, அந்த ரத்தம், ரத்த வங்கி மூலமாக அனுப்பப்பட்டுவிட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு எச்ஐவி இருப்பதை, அந்த மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் அலட்சிய போக்கால் விபரீதம் ஏற்பட போகிறது என அந்த வாலிபர் அச்சத்துடன் இருந்தார். 

இந்நிலையில், வாலிபர் கொடுத்த ரத்தம், முறையாக பரிசோதிக்கப்படாமல் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த வாலிபர், எலிக்கு வைக்கப்படும் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை, உறவினர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.