திருவாரூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து திருவாரூரில் கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி விவசாயிகள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம், கூடூரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி விவசாயிகள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள், "காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். 

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த முடிவில் இருந்து மாறாமல் தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும்" என்றுத் தெரிவித்தனர்.