கனமழையை முன்னிட்டு தகுந்த முன்னேற்பாடுகளை திமுக அரசு செய்யவேண்டும். தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாஜக துணைநிற்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரபிக்கடல் பகுதியிலும், வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொளி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை திமுக அரசு செய்ய வேண்டும். அதேபோல், எத்தகைய பேரிடரையும் சமாளிக்கும் வகையில் திமுக அரசு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வரும் வேளையில், பொதுமக்களும் மீனவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மக்கள் நலன் காக்கும் மீட்புப் பணிகளில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நமது தமிழக பாஜக தோள் கொடுத்து உறுதுணையாக நின்று களப்பணியாற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
