அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திண்டிவனத்தில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் பள்ளி சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - விழுப்புரம் ஜி.எஸ்.டி., சாலையில், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
சரத் vs அஜித்: யாருக்கு பலம்? மகாராஷ்டிராவில் இன்று கூட்டம்!
விழாவில் கலந்து கொள்ளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருமணத்துக்கு தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி காலை 10.15 மணிக்கு மேல், 11.45 மணிக்குள் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் பாஜக பிரமுகர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், ஸ்ரீராம் பள்ளி செயலாளரும், பாஜக பிரமுகருமான ஹரி கிருஷ்ணன் கூறியதாவது, “39 ஜோடிகளுக்கும் அந்தந்த மணமக்கள் வீட்டாரின் இந்து வைபவ அடிப்படையில் தாலியும், மணமகளுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் பட்டு துண்டும் மற்றும் ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெறுகிறது.” என்றார்.