சரத் vs அஜித்: யாருக்கு பலம்? மகாராஷ்டிராவில் இன்று கூட்டம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சரத் பவாரும், அஜித் பவாரும் தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளனர்
மாகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், கட்சியை கைப்பற்ற இரு தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மருமகனும், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சருமான அஜித் பவார் தனது ஆதரவாளர்களை மும்பையில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளதால், அக்கூட்டத்தின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும், அந்தந்த கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அதன் எம்எல்ஏக்களுக்கு கொறடா மூலம் அழைப்பு விடுத்துள்ளனர். சரத் பவார் சார்பில் கொறடா ஜிதேந்திர அவாத் மற்றும் அஜித் பவார் சார்பில் அமைச்சரும் கொறடாவுமான அனில் பாட்டீல் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதில், 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அஜித் பவாரின் முகாமை சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளோம். மாநில அரசில் தனிக் குழுவாக அல்ல கட்சியாக இணைந்துள்ளோம். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். கட்சியின் கொறடா உத்தரவை மீறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, அஜித் முகாமுக்கு மூன்றில் இரண்டு பங்கு அதாவது 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
4 மாநிலங்கள்.. 5 நகரங்கள்.. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
அஜித் பவார் முகாமை பொறுத்தவரை 43 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அவர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதம் மற்றும் பிரமாணப் பத்திரம் ஆகியவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இரண்டு எம்எல்ஏக்கள் சரத் பவார் முகாமுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மற்றொரு எம்எல்ஏ கிரண் லஹமேட், பதவியேற்பு விழா சரத் பவாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக நினைத்து கடிதத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை உணர்ந்த பிறகு, ராஜ்பவனில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ள அவர், தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சரத் பவார் அணியில் இருக்கும் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், ஆளும் கூட்டணியில் இணைந்த 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “அந்த ஒன்பது பேரைத் தவிர மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் என்சிபியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேறு எந்த குழுவையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களை அச்சுறுத்தக்கூடாது, பொய்யான வாக்குறுதிகளை வழங்கக்கூடாது, அழுத்தம் கொடுக்கக்கூடாது. இவர்கள் அனைவரும் சரத் பவாருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பவார் அணி நரிமன் பாயிண்டில் உள்ள ஒய்பி சவான் மையத்திலும், அஜித் பவார் அணி பாந்த்ராவிலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இரு தரப்பிலும் பலத்தை நிரூபிக்க கூட்டியுள்ள கூட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.