அண்மை காலமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த தமிழக பாஜக.வினர் தற்போது திடீரென நடிகர்களை நம்பாதீங்க என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக சார்பில் பிரசாரப் பயணம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை மதுரை மாவட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், “மக்கள் விரோத திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த பிரசார பயணத்தின் முக்கிய நோக்கம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.
இதே போன்று முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “பணத்தால் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று திமுக இறுமாப்பில் உள்ளது. ஆனால் திமுக அரசுக்கு எதிரான வெறுப்பு தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியின் இறப்புக்கு 1100 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கரூர் பிரசார நிகழ்ச்சிக்கான பாதுகாப்பில் வெறும் 100 காவல் துறையினரே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு நேரில் செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு இரவோடு இரவாக வருவதில் இருந்தே அவரது அக்கறை என்ன ன்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும். நடிகர்கள் சிறப்பான ஆட்சி தருவார்கள் என யாரும் கருதவேண்டாம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள பிரசாரப் பயணமும், நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள பிரசாரப் பயணமும் நிறைவுபெறும்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
