தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை: திருமாவளவன் திட்டவட்டம்!
ஜனநாயகத்தை பாதுகாக்கும் புதிய விடியலாக ஜூன் 4 ஆம் தேதி இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை எனவு,ம், 40க்கு 40 என திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெரும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் புதிய விடியலாக ஜூன் 4 ஆம் தேதி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை விசிக தலைவர் தொல்.திருமாவளன் பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நவீன கண்காட்சியகத்தை அமைச்சர் சேகர் பாபு உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றிய புகைப்பட கண்காட்சியை அமைத்தார். இது கலைஞரின் வரலாறு என்று சொல்லுவதை விட தமிழரின் வரலாறு என்று சொல்லுவது தான் பொருத்தமாக இருக்கும். கலைஞர் ஒரு போராளியாக பிறந்து, போராளியாக வாழ்ந்து, போராளியாகவே மறைந்தார். கடுமையான விமர்சனங்களை தாண்டி, அவதூறுகளை கடந்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய பங்கு என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.” என்றார்.
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சிற்பி கலைஞர் கருணாநிதி. இன்று பல்வேறு துறைகளில் நாம் சாதித்த சாதனை என்பது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி உள்ளது எனவும் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “கருத்துகணிப்புகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்துவது இல்லை. 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி, இந்தியாவை அதளபாதாளத்தில் சரிய வைத்துள்ளது. நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும். மக்கள் எழுதிய தீர்ப்பு ஜூன் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தியாவை சூழ்ந்த இருள் அகல உள்ளது. புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி மலர உள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் புதிய விடியலாக ஜூன் 4 ஆம் தேதி இருக்கும்.” என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய கூட்டணி வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்களிப்பு மகத்தானது என்ற அவர், “வெற்றிக்கு பின்னர் அது மேலும் உறுதிப்படுத்தப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமர்வதில் திமுக பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும். தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை. 40க்கு 40 என திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெரும்.” என்றார்.
பூம்புகார்: நனவாகுமா கலைஞரின் கனவு - ரவிக்குமார் எம்.பி.!
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஜனநாயகமான புரிதல் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் போது பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க இடமுள்ளது. எல்லாவற்றையும் ஜனநாயகப் பூர்வமாக இந்தியா கூட்டணி தீர்மானிப்பது தான் சிறப்பம்சம்.” என்றார்.
மேலும், “ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று கூறி இந்தியா கூட்டணியை விமர்சித்தனர். இதன் மூலம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், அக்கூட்டணியினர் ஆட்சி அமைக்க உள்ளனர் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியாவில் விலைவாசி உயர்வு, பொருளாதர வீழ்ச்சி, சமூக நல்லிணக்க பாதிப்பு உள்ளிட்டவை ஒரே ஒரு பிரதமர் ஆட்சியில் இருந்த போது நடந்துள்ளது. எனவே தான் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என இருந்தால் ஒன்றும் தவறு இல்லை. அது ஜனநாயக விரோத முடிவும் அல்ல. அதை நான் வரவேற்கிறேன்.” எனவும் திருமாவளவன் கூறினார்.