நாகை மாவட்டத்தில், பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் ஒழுகைமங்கலம் கிராமம் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி குருக்கள். ஒன்றிய பாஜக தலைவர். இன்று அதிகாலையில், பாலாஜியின் குடும்பத்த்தினர் பால் வாங்குவதற்காக வெளியே வந்தனர். அப்போது, வீட்டின் வாசலில் ஒரு பட்டில் தீயுடன் இருந்தது. அதில், பெட்ரோல் வாடை வந்தது.

மேலும் வீட்டின் மேற்கூரையில் கரும்புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாலாஜி அங்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு இருந்த பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசியுள்ளனர். ஆனால், பாட்டில் வெடிக்காமல் கீழே விழுந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தெரிந்தது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வீசப்பட்டு கிடந்த பாட்டிலை கைப்பற்றி, அதனை வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இச்சம்பவம் நடந்ததா, தொழில் போட்டியா அல்லது வேறு காரணமா எனவும் விசாரிக்கின்றனர்.