புரட்சிக்கான நேரம் இது! பாஜக கூண்டை உடைத்துப் பறக்கப்போகிறது! அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு
பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் அரசியல் களம் மாறிவிட்டதாவும் பாஜக கூண்டுக்கிளி இல்லை என்றும் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் புரட்சிக்கான நேரம் இது என்றும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். புதன்கிழமை பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் அரசியல் களம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் புரட்சிக்கான நேரம் இது. பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கும் நிலை வந்துவிட்டது. பாஜகவின் பாதை தனிப்பாதையாக, சிங்கப்பாதையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
"வட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக கிறிஸ்தவ மக்கள் உள்ளனர். ஆனால், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. கோவாவிலும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அங்கேயும் பாஜக ஆட்சிதான். கிறிஸ்தவர்கள் பாஜக ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இவ்வாறு எல்லா இடங்களிலும் களம் மாறிவிட்டது. பாஜக தமிழகத்தில் கூண்டுக்கிளி போல் இல்லாமல் கூண்டை விட்டு வெளியே பறக்கும் கிளியாக மாறியுள்ளது. கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே பறப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது" என்றும் சூளுரைத்தார்.
"தமிழகத்திலும் அரசியல் களம் மாறியிருக்கிறது. தற்போதைய நடந்துகொண்டிருக்கும் அரசியல் தொடர்ந்து நடந்தால் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிடும். திமுக அமைச்சர்கள் மக்கள் கண் முன்னாலேயே கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
பாஜக அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை