இனி இப்படி பேச மாட்டேன்..! நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி- நிபந்தனை முன் ஜாமின் வழங்கிய நீதிபதி
குண்டு வைப்போம் என பேசிய வழக்கில், இனி இது போல பேசமாட்டேன் என மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகியும், முன்னாள் ராணுவ வீரருமான பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ராணுவ வீரர் கொலை- பாஜக போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில், குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பாக உண்ணாவிரத போரட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும்,பாஜக முன்னாள் ராணுவ பிரிவை சேர்ந்த கர்னல் பாண்டியன் பேசுகையில், ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல, நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.
குண்டு வைப்போம்- பாஜக நிர்வாகி
இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என தமிழக அரசு எச்சரிக்கை செய்வதாக கூறினார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்னல் பாண்டியனை கைது செய்தி சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. அதே நேரம் கர்னல் பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறையைத் தூண்டுவது என்பதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். எனவே கர்னல் பாண்டியனை போலீசார் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். மனுதாரர் சார்பில், இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இனி இதுபோல பேச மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியன், இனி இதுபோல பேச மாட்டேன் எனறு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் இதனையடுத்து நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒருவாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்