தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்பாளர்களின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம், கூட்டணியை உருவாக்குதல், கூட்டணியை பலப்படுத்துதல், பூத் கமிட்டி தொடங்கி பொறுப்பாளர்கள் நியமனம் வரை தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தையும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பொறுப்பாளார்களை நியமனம் செய்துள்ளது. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினரான பைஜெயந்த் பாண்டா கட்சியின் தேசிய துணைத்தலைவராக இருக்கிறார்.

அமைச்சர் அமித்ஷாவுடன் இணை அமைச்சராக பணியாற்றும் முரளிதர் மொஹோல் இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாஜக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.