பாஜக கூட்டணி சுயமரியாதை கூட்டணி, திமுக கூட்டணி அடிமை கூட்டணி - பாஜக ஸ்ரீனிவாசன்
பாஜக கூட்டணி சுயமரியாதை கொண்ட கூட்டணி என்றும், திமுக கூட்டணி ஆண்டான் அடிமை கூட்டணி என்றும் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “ திமுக கூட்டணி என்பது ஆண்டான் அடிமை கூட்டணி. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் திமுகவின் அடிமைக் கட்சிகளாக உள்ளன. திமுக சொல்வதையே அந்த கட்சிகள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். பேரறிவாளனை ஸ்டாலின் கட்டியணைத்த போது, காங்கிரஸ் என்ன செய்தது?
வாயில் கருப்புத்துணி கட்டி கே.எஸ் அழகரி 10 நிமிடம் ரோட்டில் உட்கார்ந்திருந்தார் அவ்வளவு தானே? காங்கிரஸ் அடிமைக் கட்சி என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் என்ன வேண்டும். ஆனால் எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுய ஆளுமை, சுய மரியாதை கொண்டவர்கள். மாற்றுக்கருத்துகளை பேசத்தான் செய்வார்கள்.” என்று தெரிவித்தார்.
தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது குறித்து பதிலளித்த அவர் “ ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து தான் தேர்தலை சந்தித்தது. அதன்பின்னர் இரு கட்சிகளும் கூட்டணியில் இல்லை என்று அறிவித்துக்கொள்ளவில்லையே. தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று தான் எடப்பாடி சொல்கிறார். கூட்டணி இல்லை என்று சொல்லவில்லையே” என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ அண்ணாமலை சொன்னது எதார்த்தமான கருத்து. ஆளுநர் கட்சி அரசியல் பேசக்கூடாத். திமுக ஆட்சி சரியில்லை என கட்சி ரீதியாக ஆளுநர் பொதுவெளியில் பேசக்கூடாது. ஆனால் திராவிடம், சனாதன குறித்து ஆளுநர் பேசுவது பொது அரசியல், சித்தாந்த அரசியல் அதனை ஆளுநர்கள் பேசலாம்” என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து பதிலளித்த அவர் “ ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராவதையே அக்கட்சியினர் விரும்பவில்லை. இதில் ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால் யார் வாக்களிப்பார்கள்?” என்று தெரிவித்தார்.