Annamalai : தமிழகத்தில் பாஜக படு தோல்வி.. திடீர் அழைப்பு.. டெல்லிக்கு புறப்பட்ட அண்ணாமலை- காரணம் என்ன.?
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40க்கும் 40 இடங்களில் படு தோல்வி அடைந்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேசிய தலைமையின் திடீர் அழைப்பு காரணமாக டெல்லி சென்றுள்ளார்.
பாஜகவை கை விட்ட தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் திருவிழாவாகவே நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம் என உறுதியாக நம்பிய பாஜகவின் கனவு பலிக்கவில்லை. அதிக தொகுதிகளை கைப்பற்றுவோம் என எதிர்பார்த்த உத்தரபிரதேசமும் கை கொடுக்கவில்லை மேற்கு வங்காளமும் காலை வாரியது. தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கும் தவறானது. தமிழகத்தில் பாஜக கூட்டணி போட்டியிட்ட 40 இடங்களிலும் தோல்வியை தழுவியது. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்துள்ளது.
அண்ணாமலை டெல்லி பயணம்
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் குறைந்த பட்சம் 15 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். அதுவும் அண்ணாமலையில் பேச்சால் கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்தநிலையில் தமிழக பாஜகவை அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு வலுப்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்ய தேசிய மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாஜக தேசிய மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் டெல்லிக்கு அண்ணாமலை புறப்பட்டு சென்றுள்ளார்.
தோல்வி குறித்து ஆலோசனை
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்தும், வாக்கு சதவிகிதம் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றி விட்டு புதிய தலைவரை நியமித்து சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் வகையில் வியூகம் அமைக்கப்படும் என தெரிகிறது.