ஈரோட்டில் விஜய் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள நிலையில், மக்கள் விருப்பமே விஜய்யை முதல்வராக்கும் என்றும், தவெக சின்னம் பெற்றதும் அரசியல் கணக்குகள் சிதறும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் சூழல் தேர்தல் காற்றால் சூடுபிடித்து வருகிறது. தவெக கட்சி பல மாவட்டங்களில் தளம் விரிவடையும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நிலையில், செங்கோட்டையன் இணைந்தது மேற்கு மண்டல அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பொறுப்பேற்ற அவர், தினசரி பயணங்கள், கூட்டங்கள், அமைப்புசார் மதிப்பீடுகள் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதிகளில் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி பெற தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். காவலர்கள் திரளும் என கருதப்பட்டதால், போலீசார், போக்குவரத்து மற்றும் இட அமைப்பு குறித்து ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக மாற்று தளம் தேவை என அறிவிக்கப்பட்டதால், நிர்வாகிகள் புதிய இடத்தை முடிவு செய்ய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்போது பேசிய செங்கோட்டையன், தற்போதைய அரசியல் நிலை மாறி வருகிறது என சுட்டினார். எடப்பாடி பழனிசாமியின் “பிள்ளையார் சுழி போட்டாச்சு” குறிப்பு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த அவர், அந்தச் சுழி இப்போது வேறு திசை திரும்பிவிட்டது என குறிப்பிட்டார். மற்றவரின் நெஞ்சில் சாய்ந்து முன்னேறலாம் என்று சிலர் நினைத்தாலும், மக்கள் விருப்பமே அரசியலில் மிகப்பெரிய சக்தி என்று அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், விஜய்யை முதலமைச்சர் பதவிக்குத் தள்ளப் போவது மக்களின் விருப்பமே. குழந்தைகள் கூட பெற்றோரிடம் விஜய்க்கு வாக்களிக்கச் சொல்கின்ற நிலை வந்துவிட்டது” என்று கூறிய அவர், நீண்டகாலம் ஆட்சி செய்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டியதில்லை. ஒரு புதிய தலைமையை மக்கள் எதிர்பார்த்தனர், அந்த முகம் விஜய் என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்தார்.
தவெக விரைவில் தேர்தல் சின்னம் பெறும், அது வெளியானதும் தமிழ்நாட்டு அரசியல் கணக்குகள் சிதறும் எனவும் செங்கோட்டையன் கூறினார். அந்தச் சின்னம் வெளியானது என்றால், அதை வெல்வது எந்தக் கட்சிக்கும் எளிதல்ல என்று மறைமுக எச்சரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் செங்கோட்டையன் விடுத்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சு கொங்கு மண்டலம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.


