திருவண்ணாமலை

திருவண்ணாமலையில், அழகிய முகம், எட்டு கரங்களில் அபாயகரமான ஆயுதங்களுடன் சோழர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த எறும்பூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் வடக்கு மதில் அருகே வெட்டவெளியில் கொற்றவை சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை தொல்லியல் ஆர்வலரும்,  வரலாற்று ஆய்வாளருமான கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார். 

கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து கை.செல்வகுமார் கூறியது: "இந்தக் கொற்றவை சிலையை காளி அல்லது துர்கை என்று அழைக்கின்றனர். 

இந்தச் சிலை கி.பி 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு  வரையான இடைப்பட்ட கால கட்டத்தில் சோழர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம். 

இதே காலகட்டத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பட்டீஸ்வரன் கோயில் குறித்த தொல்லியல் களப்பணி ஆய்வின்போது துர்கை அம்மன் கோயில் இருந்ததாகவும், அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளதாகவும்,  ராஜேந்திர சோழன் காலத்து வகையைச் சேர்ந்தது எனவும் கருதப்படுகிறது.

இந்தப் பகுதியில் மக்கள் பழைமை வாய்ந்த இந்தக் கொற்றவை சிலையை  துர்கை அம்மனாக வழிபட்டு வந்துள்ளனர். சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தின் கடவுளாக கொற்றவை தெய்வம் இருந்துள்ளதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. 

மூவேந்தர்கள் காலத்திலும் கொற்றவை வழிபாடு  இருந்துள்ளது. அந்த வகையில் சோழர், பல்லவர் காலத்தில் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இந்தச்  சிலையை வழிபட்டு வந்திருக்க வேண்டும்.

தமிழில் கொற்றவையே முதன்மையான தெய்வம். அழகிய முகத்துடன் எட்டு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் உள்ளிட்ட  ஆயுதங்களுடன் அபாயகர முத்திரையுடன் எருமையின் தலைமேல் நின்று கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சிலை காணப்படுகிறது. 

இந்த ஊரில் அமைந்துள்ள பட்சீஸ்வரன் கோயிலும், மாணிக்கவாசக பெருமான் கோயிலும்  9-ஆம் நூற்றாண்டு இடைவெளியில் சோழர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். எனவே,  இந்தக் கொற்றவை சிலையும் அந்தக் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.