Bath Ban Lift at kumbakkarai falls

தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தலைநகரான சென்னையில் நேற்று வெப்பம் குறைந்து காணப்பட்டதை உணர முடிந்தது.இருப்பினும் உள்மாவட்டங்களில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்ததால் அருவிக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனைத் தொடர்ந்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.