காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா, இது ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய குரல் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் என திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா கூறியுள்ளார். அவர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பது இந்துத்துவாவின் பேச்சு என்றும் சாடியுள்ளார்.
தமிழக அரசியலில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் 'கூட்டணி ஆட்சி' மற்றும் 'அதிகாரப் பகிர்வு' என்ற கோரிக்கையை, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் கையில் எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவிற்கு திமுக முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா மிகக் காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.
இது ஆர்.எஸ்.எஸ்-ஸின் அஜெண்டா
இதுகுறித்து எம்.எம்.அப்துல்லா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன், தகைசால் தமிழர் அய்யா பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.
அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது” மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் பதிவு
சமீபத்திய தேர்தல் தரவுகளை மேற்கோள் காட்டி எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டில் கூட்டணி என்பதே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளது. இப்போது வெறும் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் (Share of seats) நேரம் மட்டுமல்ல, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் (Share of power) நேரம் வந்துவிட்டது." என்று தெரிவித்தார்.
இதன் மூலம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் இடம் வேண்டும் என்பதை அவர் மறைமுகமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
பின்னணி என்ன?
தமிழகத்தில் 1967-க்குப் பிறகு தனிப்பெரும் கட்சிகளே ஆட்சி அமைத்து வருகின்றன. இடையில் 2006-2011 காலகட்டத்தில் திமுக 'மைனாரிட்டி' அரசாக இருந்தபோது காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றிக் கழகம்' மாநாட்டில் "கூட்டணி ஆட்சிக்குத் தயார்" என அறிவித்தது, கூட்டணி கட்சிகளிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இருப்பினும், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை" என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.


